முத்துப்பேட்டையில் 15, 11வது வார்டை இணைக்கும் சேதமான சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டும்-மக்கள் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் சேதமான சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட 15,11-வது வார்டின் பகுதியை இணைக்கும் பேட்டை சாலையிலிருந்து குட்டியார்பள்ளி முதல் துவங்கும் சிமென்ட் சாலையானது ஜமாலியா தெரு, கோவிலான் தோப்பு, காமராஜர் காலனி, பந்தலடி திடல், ஊமை கொல்லை ஆகியவை கடந்து செம்படவன்காடு பெருமாள் கோவில் அருகே முடிகிறது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மக்கள் வசித்து வருகின்றனர்.

அதே போல் பள்ளி கூடங்கள், பல்வேறு தரப்பினரின் வழிப்பாடு தளங்களும் உள்ளன. சுமார் 2கிமீ தூரம் உள்ள இந்த சிமிண்ட் சாலை சுமார் 8வருடங்களுக்கு முன்பு இருந்த தார்சாலைக்கு பதிலாக போடப்பட்ட ஒரு சிமென்ட்சாலையாகும். சாலை பனி நடைபெறும் போதே முறையான பணிகளை ஒப்பந்தக்காரர்கள் செய்யாததால் அடுத்த சில நாட்களிலேயே சாலை சேதமாக ஆரம்பித்துவிட்டது.

தற்பொழுது மக்கள் பயன் படுத்தவும் வாகனங்கள் செல்லவும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பல்லாங்குழி போன்று தற்பொழுது உள்ளது. பல பகுதியில் சாலையே காணவில்லை. அதேபோல் இப்பகுதியில் குளங்களை கடக்கும் சாலையில் தடுப்பு சுவர்கள் சாய்ந்து சாலை ஆபத்தான நிலையில் சேதமாகி உடைந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அதேபோல் கனரக வாகனங்கள் செல்வதும் தடைப்பட்டு விட்டது. ஆனாலும் பள்ளி வாகனங்கள், பைக்குகள் சிரமத்துடன் செல்கிறது. இதன் மூலம் சிறுசிறு விபத்துக்கள் முதல் பெரியளவிலான விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் இனியும் காலதாமதப்படுத்தாமல் இந்த சாலையை சீரமைத்து சரி செய்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: