×

மஞ்சூர்-கோவை சாலையில் மீண்டும் காட்டு யானைகள் நடமாட்டம்-அரசு பஸ்களை வழிமறிப்பதால் பயணிகள் பீதி

மஞ்சூர் :  மஞ்சூர் கோவை சாலையில் அரசு பஸ்கள், வாகனங்களை வழி மறிக்கும் காட்டு யானைகளால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குன்னூர் சுற்றுப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றன.

இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானை நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தன. இந்நிலையில், காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பி உள்ளன. கடந்த இரு நாட்களாக 6 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகின்றன. பெரும்பாலும், சாலைகளிலேயே நடமாடுவதால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை கெத்தை அருகே 5 காட்டு யானைகள் வழிமறித்தன. யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார். அப்போது, மஞ்சூர் பகுதியில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டன. எதிரே காட்டுயானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று சாலையோரம் இருந்த மண் பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி சென்றன.அதன்பிறகே, அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மஞ்சூர் கோவை சாலையில் மீண்டும் காட்டு யானைகள் நடமாட்டம் துவங்கி உள்ளதால் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Manjur-Coimbatore , Manzoor: Passengers are panicked by wild elephants blocking government buses and vehicles on the Manzoor Coimbatore road.
× RELATED மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்கள், வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள்