×

கொள்ளிடம் அருகே ஓஎன்ஜிசி எரிவாயு குழாய் பதிக்க முந்திரி தோட்டம் சேதம்-உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே ஓஎன்ஜிசி எரிவாயு குழாய் பதிக்க முந்திரி தோட்டம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து செம்பனார்கோயில் பகுதியில் உள்ள மேமாத்தூர் என்ற இடத்துக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்து செல்வதற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வேட்டங்குடி கிராமத்தில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் வந்து குழாய் பதிப்பதற்காக முந்திரி மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாய சங்கத்தலைவர் வில்வநாதன் கூறுகையில், வேட்டங்குடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இது விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை நம்பி விவசாயிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் குழாய் பதிப்பதற்காக திடீரென வேட்டங்குடி கிராமத்தில் முந்திரி தோட்டத்துக்குள் சில ஊழியர்கள் புகுந்து முந்திரி மரக் கிளைகளை வெட்டி அகற்றியுளளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அத்துமீறி இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags : ONGC ,Kollidam , Kollidam: The cashew plantation near Kollidam was damaged due to an ONGC gas pipeline. So appropriate
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்