×

புதுச்சேரி, காலாப்பட்டில் தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள் துணிகர கொள்ளை

புதுச்சேரி : புதுச்சேரி காலாப்பட்டில் தலைமை ஆசிரியரின் வீட்டை உடைத்து 45 பவுன் நகைகளை பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.புதுச்சேரி, காலாப்பட்டு, பள்ளத் தெருவை சேர்ந்தவர் பெனடிக்ட் பிரான்சிஸ் (58). விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலா ஜெயசீலா (53). இவர் செய்யாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவரது மகன் பட்டப்படிப்பு பயிலும் நிலையில் செமஸ்டர் விடுமுறைக்காக வெளியூர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தம்பதியர் தனியாக இருந்துள்ளனர்.

தற்போது கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. நேற்று பெனடிக்ட் பிரான்சிசும், அமலா ஜெயசீலாவும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். பின்னர் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பினர். வீட்டு மெயின் கதவை திறந்து உள்ளே சென்ற போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து திடுக்கிட்ட அவர்கள் பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது பீரோ திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதிலிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு நெக்லஸ், ஆரம், செயின், மோதிரம், கம்மல் என மொத்தம் 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. பின்பக்க கதவை மட்டுமே உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோ மற்றும் லாக்கர் அறையின் சாவிகள் அதிலேயே இருந்ததால் சிரமமின்றி எளிதாக நகைகளை ஒரு பையில் போட்டு அள்ளிச் சென்றுள்ளனர். ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக உடனே காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு பெனடிக்ட் பிரான்சிஸ் தகவல் கொடுத்தார்.  சீனியர் எஸ்.பி. தீபிகா உத்தரவின் பேரில் எஸ்.பி. வம்சித ரெட்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ சிவப்பிரகாசம் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பெனடிக்ட் பிரான்சிஸிடம் புகாரை பெற்ற போலீசார், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டே மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.  அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும்  இல்லாதததால் விசாரணையை பல்வேறு கோணங்களில் முடுக்கி விட்டுள்ளனர். அப்பகுதியில் நடமாடிய மர்ம நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்த போலீசார், மாஜி கொள்ளையர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரி, விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Puducherry ,Kalapatti , Puducherry: Mysterious people who broke into the headmaster's house in Puducherry and looted 45 pounds of jewelery in broad daylight.
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை