×

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்: 100மீ தொலைவிலேயே தடுப்பு அரண் அமைத்து கண்காணிப்பு

சென்னை: சென்னையை அடுத்த வானகரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்றிலிருந்தே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, நாளைய தினம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அதிமுகவில் இருக்கக்கூடிய இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஒரு தரப்பினர் அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், மறுதரப்பினர் வழங்கக்கூடாது என்றும் மாறி மாறி மனு அளித்தனர். இந்நிலையில் நேற்றைய தினம், ஆவடி காவல்நிலையத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இன்று அம்மனுவானது நிராகரிக்கப்பட்டு, அதிமுக பொதுக்குழுவிற்கு காவல்துறை பாதுகாப்பது அளித்து வருகிறது.

வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழுவானது நடைபெற உள்ளது. இதில் ஏராளமான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கட்அவுட் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, வானகரம் மண்டபத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. காலை முதல் தற்போது வரை 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு நடத்தப்படும் திருமண மண்டபத்தில் 100மீ-க்கு முன்பாக, இருப்பு பேரிகார்டுகள் போடப்பட்டு, பலத்த சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதி வழங்கப்படுகிறது. நாளைய தினம் சோதனைகள் தீவிர படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். நாளை ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு நடக்க இருப்பதால் கட்சியினர் வரவேற்பு அளிக்க வழிநெடுகிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். கட்அவுட் வைப்பது,சாரம் அமைப்பது, மேடைகளை மலர்களால் அலங்கரிப்பது போன்ற பணிகளில் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.    


Tags : AIADMK ,Body , AIADMK, General Body Meeting, 100m Distance, Barrier, Surveillance
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...