கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை: மாநகராட்சி நடவடிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வியாபாரிகள் மற்றும் வாகன டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2020ம் ஆண்டு வியாபாரிகள் மற்றும் காய்கறி, பழங்கள் வாங்க வந்தவர்கள் என பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரவியதால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு, சுமார் 3 மாதங்களுக்கு வெவ்வேறு  இடங்களில் தற்காலிகமாக காய்கறி, பழ மற்றும் பூ மார்க்கெட்கள் செயல்பட்டு வந்தன. பின்னர் தொற்று குறைந்தவுடன், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டது. தொற்று வெகுவாக குறைந்த போதிலும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் ஒருமுறை கொரோனா பரவும் மையமாக மாறிவிடக் கூடாது என்பதில் மார்க்கெட் நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி, மார்க்கெட் நிர்வாக அலுவலர் சாந்தி தலைமையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த மொத்த வியாபாரிகள் என பலருக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமில்லாமல், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறி, பூக்கள் போன்றவற்றை ஏற்றி வந்த லாரி, வேன் டிரைவர்கள், கிளீனர்கள் என்று அனைருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், கிருமி நாசினி உபயோகித்தல்  உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை, மாலை வேளைகளில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் கொரோனா தொற்று பரவும் தளமாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். எனவே, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை  முனைப்புடன் செய்து வருகிறோம். வியாபாரிகளின் வாழ்வாதாரம், பொதுமக்கள் நலம் இவற்றை கருத்தில் கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

பட்டியல் தயாரிப்பு

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள  கடைகளில் இருக்கும் அனைத்து வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களின்  விவரங்கள் பட்டியலாக சேகரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் அவர்களுக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பட்டியலில் விடுபட்டவர்களின்  வீடுகளுக்கு நேரடியாக சென்றும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: