ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரிகள் திறப்பு எம்டிசி பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

* புதிய வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி தீவிரம்

* விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு

சென்னை: ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரிகள் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது. எனவே பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என மக்களிடம் இருந்து வரும் கோரிக்கை ஏற்று புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது தொடர்பான நடவடிக்கையில் எம்டிசி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகத்துக்கு (எம்டிசி) சொந்தமாக 31 பணிமனைளில் 3,454 பஸ்கள் உள்ளது. இதில் தினசரி 27.54 லட்சம் பேர் பயணிக்கின்றனர். கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்தாலும் வழக்கம்போல பஸ்கள் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. எனினும், சென்னை மாநகர் மட்டும் அல்லாது சுற்றுப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக இயங்கத்தொடங்கி விட்டது. இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல் விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவதால் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களும் அதிக அளவு பயணிக்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. முன்பு ஏசி பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

ஆனால், தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் ஏசி பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களினால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என போக்குவரத்துக்கழகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமீபகாலமாக எம்டிசி பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கு மகளிருக்கு இலவச பயணம், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரிகள் திறப்பு போன்றவையே காரணமாகும். இதனால் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருந்தும், மாநகருக்குள் ஐடி நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் சிற்றுந்து சேவை ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து எந்த, எந்த இடங்களில் புதிதாக பஸ்களை இயக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். புதிய வழித்தடங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணியானது விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு முடிவடைந்த பிறகு தேர்வு செய்துள்ள வழித்தடங்களில் எத்தனை பேருந்துகளை இயக்கலாம், அவ்வாறு இயக்குவதன் மூலம் எவ்வளவு மக்கள் பயன் பெறுவார்கள், எந்த, எந்த பகுதிகளுக்கு பேருந்து சேவை கிடைக்கும், பேருந்துகளின் எண்ணிக்கை போன்ற அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு அளிப்போம். அரசு அதனை பரிசீலனை செய்து, புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கும். மேலும் இதற்காக புதிய பஸ்களை கொள்முதல் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம். தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை மாநகர் மட்டும் அல்லாது சுற்றுப்புற பகுதிகளில்இருக்கக்கூடிய தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக இயங்கத்தொடங்கி விட்டது. இதனால் அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Related Stories: