திருவள்ளூர், ஆவடியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர், ஆவடியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டரங்கில் யோகா பயிற்சி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் கபால் பதி என்ற யோகாசனம் மூலம் மூச்சை வெளியில் தள்ளி உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் வெளியே தள்ளும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல் அனுலோபிலம் என்ற பயிற்சியால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்பதால் அதற்கான பயிற்சி உள்ளிட்ட யோகாசனத்தை யோகா ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர். இந்த யோகா பயிற்சியில் சேவா சமிதி யோகா ஆசிரியர் தேவேந்திரன், யுவபாரத் ஆசிரியர் க.ரமேஷ், பேட்டர்ன் எம். ஓம்பிரகாஷ், யோக் சமிதி ஆசிரியர் மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி அளித்தனர்.

ஆவடி: ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்தவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபடும் நிகழ்ச்சி நேற்று நடத்தினர். இதில் மத்திய காவல்துறை துணைத்தலைவர் எம்.தினகரன், மத்திய பயிற்சி காவல் துணைத் தலைவர் கேவல்சிங் தலைமை வகித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு 58 நாடுகளில் தொடங்கப்பட்ட இந்த யோகா தற்போது 183 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. உடல் நலத்தை பேணி பாதுகாக்கும் வகையில் யோகா முக்கிய பங்காற்றுவதாகவும் யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என யோகா கலை நிபுணர் வினோத் தெரிவித்தார்.

Related Stories: