திருத்தணி அருகே காஸ் சிலிண்டர் வெடித்த குடும்பத்துக்கு நிதி உதவி: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருத்தணி: காஸ் சிலிண்டர் வெடித்து வீடு இழந்த குடும்பத்தினருக்கு எஸ்.சந்திரன் எம்எல்ஏ நிதியுதவி வழங்கினார். திருத்தணி அடுத்த சிவாடா கிராமத்தை சேர்ந்தவர் பழனி(44). விவசாயி. இவரது குடிசை வீட்டில் நேற்று முன்தினம் திடீரென காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில், குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகியது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் நேற்று நேரில் சென்று காஸ் சிலிண்டர் வெடித்து கருகிய வீட்டை பார்வையிட்டார். தொடர்ந்து எம்எல்ஏ சந்திரன் பாதிக்கப்பட்ட பழனியின் குடும்பத்தினருக்கு ரூ.10,000 நிதி உதவி வழங்கினார். மேலும் விரைவில் தொகுப்பு வீடு கட்டித்தரப்படும் எனவும் அவரிடம் உறுதியளித்தார். மேலும் தீ விபத்தில் காயமடைந்த தனுஷ் என்ற வாலிபரை சந்தித்து எம்எல்ஏ சந்திரன் ஆறுதல் கூறினார். இதில் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் க.ஏழுமலை, பூனிமாங்காடு வருவாய் ஆய்வாளர் முகமது யாசர், கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், சந்துரு உள்பட கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: