கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய கவுன்சிலர் மதன்மோகன் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி மீது பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி ஒன்றிய அரசை கண்டித்தும், அறவழியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய புதுடெல்லி காவல்துறையை கண்டித்தும் கும்மிடிப்பூண்டி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு வட்டார தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான மதன்மோகன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி நகர காங்கிரஸ் தலைவர் பிரேம் குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு வட்டார தலைவர் எஸ்.எஸ்.பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் ஏ.எஸ்.சிவா ரெட்டி, மாவட்ட செயலாளர் கும்புளி ஆர்.மணி, மாவட்ட செயலாளர்கள் டுபாண்ட் ராஜேந்திரன், அர்ஜுன் ராஜ், நகர பொருளாளர் டி.பி.மணி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஹேமகுமார், வட்டார துணை தலைவர் மகேஷ், நகர செயலாளர் எஸ்.சதிஷ், பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசையும், டெல்லி போலீசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஒன்றிய அரசு மக்கள் விரோத போக்கிலும், முதலாளிகளின் நலனுக்காவும் ஆட்சி நடத்துவதாக குற்றம்சாட்டினர்.  மேலும் ஒன்றிய அரசு விலைவாசியை கட்டுப்படுத்துவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தருவது போன்றவற்றை பற்றி யோசிக்காமல், ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுகிறது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ராகுல் காந்தி மீது ஒன்றிய அரசு போட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெறும் வரை கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து அனைவரும் காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர்.

Related Stories: