×

யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 10,000 இடங்களில் பயிற்சி முகாம்: ஒன்றிய அமைச்சர்கள், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

சென்னை: யோகா தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 10,000 இடங்களில் நேற்று காலை யோகா பயிற்சி நடந்தது. இந்த முகாம்களில் ஒன்றிய அமைச்சர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். யோகா கலையை பாதுகாக்க பிரதமர் மோடியால் 2015ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சர்வதேச யோகா தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் இடங்களில் நேற்று காலை யோகா பயிற்சி நடந்தது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடந்த யோகா பயிற்சியில் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் நாராயணசுவாமி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பங்கேற்று ேயாகாசனம் செய்தனர்.

இதில் பாஜ மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாவட்ட தலைவர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியன் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் யோகா பயிற்சி நடந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இதேபோல, சென்னையில் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், பள்ளி, கல்லூரிகள்  என பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி நடந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். மேலும், மாணவர்களின் யோகா சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. தஞ்சாவூரில் நடந்த யோகா தினத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவியும், திருநெல்வேலியில் சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காந்தி எம்எல்ஏவும் யோகா பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். இதேபோல், நாடு முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் பயிற்சிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Yoga Day ,Union ,Ministers ,Governor ,RN ,Ravi , Training camp at 10,000 places in Tamil Nadu on the eve of Yoga Day: Union Ministers, Governor RN Ravi participated
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!