×

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தேர்தல்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி தேர்தல் மூலம் நிரப்பப்படும் பதவியிடங்களில் 30.4.2022 வரை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தேர்தல்கள் அடுத்த  மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (காட்டாங்கொளத்தூர் வார்டு 10, மதுராந்தகம் வார்டு 15) பதவியிடங்களுக்கும் மற்றும் 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (திம்மாவரம் - வார்டு 4, பொன்பதிர்கூடம்-வார்டு 2, திரிகுலம் வார்டு 1, நன்மங்கலம் - வார்டு 1) பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 20.6.2022 முதல் தொடங்கியுள்ளது. வேட்பு மனு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 27ம் தேதியும், வேட்பு மனுக்கள் பரிசீலனை வரும் 28ம் தேதியும் நடைபெறும். வேட்பு மனுக்களின் பட்டியல் அன்றைய தினமே வெளியிடப்படும். வேட்பு மனுக்களை வரும் 30ம் தேதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். போட்டியுள்ள பதவியிடங்களுக்கு அடுத்த  மாதம் 9ம் தேதி அன்று ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள இந்த தற்செயல் தேர்தல்களுக்கு மொத்தம் 40 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவு  அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. பதிவாகும் வாக்குகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 12.7.2022ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடவடிக்கை அனைத்தும் 14.7.2022ம் தேதி முடிவுபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu District , Election for Vacancies in Rural Local Bodies in Chengalpattu District: Collector Information
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!