×

பல லட்சம் மதிப்பு போதைப்பொருள் விற்ற தான்சானியா வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி விற்பனை செய்து வந்த தான்சானியா நாட்டை சேர்ந்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் இருந்து தமிழகத்துக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடந்த 2014 ஜனவரி 25ம் தேதி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்  தகவலின்படி மதுரவாயலில் தங்கியிருந்த தான்சானியா நாட்டை சேர்ந்த மார்கஹென்றி (எ) ஜான்0 (36) என்பவரின் அறைகளை போலீசார் சோதனை செய்தனர்.

அதில், மார்க் ஹென்றி அறையில், சிறு சிறு பொட்டலங்களாக கோகைன், மெத்தாகுலேசன், ஹெராயின் போன்ற போதை பொருட்கள் இருந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் இருந்து 123 கிராம் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு சார்பில் வழக்கறிஞர்கள் என்.பி.குமார், செல்லதுரை ஆகியோர் ஆஜராகி சாட்சிகளை விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் மார்க் ஹென்றிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Tanzanian teenager sentenced to 12 years in prison for selling millions worth of drugs
× RELATED பெண்ணிடம் தவறாக நடந்த பிஸியோதெரபிஸ்ட் கைது