காதல் வலை விரித்து பாதுகாப்பு ரகசியங்களை பெற்ற ஐஎஸ்ஐ பெண்: ஐதராபாத்தில் டிஆர்டிஎல் ஊழியர் கைது

திருமலை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் குறியீடு உள்ளிட்ட பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யின் பெண் உளவாளிக்கு பகிர்ந்த டிஆர்டிஎல் ஊழியர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை ஆயுதக் கிடங்கு (என்ஏடி) குடியிருப்பை சேர்ந்தவர் மல்லிகார்ஜூனா ரெட்டி. இவரது தந்தை என்ஏடியில் சார்ஜ்மேன் சிவிலியனாகப் பணிபுரிந்து கடந்த 2014ல் ஓய்வு பெற்றார். மல்லிகார்ஜூனா விசாகப்பட்டினத்தில் பாலாபூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தின் ஆர்.சி.ஐ. வளாகத்தில் கடற்படை மேம்பாட்டு அமைப்பு திட்டத்தில் (டிஆர்டிஎல்) ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த மார்ச் 2020ம் ஆண்டு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யை சேர்ந்த நடாஷாராவ் (எ) சிம்ரன் சோப்ரா(எ) ஒமிஷா அதிதி என்ற ஒரு பெண் பேஸ்புக்கில் நண்பராக அறிமுகமாகி உள்ளார். இந்த நட்பை தொடர்ந்து மல்லிகார்ஜூனாவை காதல் வலையில் வீழ்த்திய அந்த பெண், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து நடாஷாராவ் கேட்ட டிஆர்டிஎல்-ஆர்சிஐ  குறித்த முக்கியமான தகவல்களையும்,  நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைைய ஏவுவதற்கு பயன்படுத்தப்படும் கே-சீரிஸ் குறியீட்டையும் நடாஷாராவிடம் மல்லிகார்ஜூனா பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு முதல்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பாதுகாப்பு ரகசிய விவரங்களை ஐஎஸ்ஐ உளவாளி பெண்ணான நடாஷாராவிடம் வழங்கி வந்துள்ளார்.

இதனை அறிந்த போலீசார் மல்லிகார்ஜூனாவை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதற்கிடையே, நடாஷாராவின் வங்கிக் கணக்கு விவரங்களையும் மல்லிகார்ஜூனா  கேட்டுள்ள நிலையில், பணப்பரிமாற்றம் நடந்ததா? என்பதை உறுதிப்படுத்தும் பணியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தேசிய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவித்தாக மல்லிகார்ஜூனா  மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 409 மற்றும் 3(1)(C), 5(3), 5(1)(A) அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம்-1923ன்கீழ் பாலாபூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து  2 செல்போன்கள், சிம்கார்டு, லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், மல்லிகார்ஜூனாவின் செல்போனில் இருந்து நடாஷாராவுடன் நடந்த வாய்ஸ் பதிவுகளை ஆய்வு செய்து மேலும் விவரங்களை சேகரிப்பதோடு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த ஐஎஸ்ஐ பெண் உளவாளிக்கு 2 ஆண்டுகளாக பாதுகாப்பு ரகசியங்கள் பரிமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: