ரஞ்சிக் கோப்பை பைனல் மத்தியபிரதேசம் மும்பை மோதல்: இன்று பெங்களூரில் தொடக்கம்

பெங்களூர்: ரஞ்சிக் கோப்பை  டெஸ்ட்  தொடர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  அரையிறுதியில் வெற்றிப் பெற்ற மத்திய பிரதேசம், மும்பை அணிகள்  இன்று  பெங்களூர் சின்னசாமி அரங்கில்  தொடங்கும்  இறுதி ஆட்டத்தில் களம் காண உள்ளன. ஆதித்யா ஸ்ரீவத்சவா தலைமையிலான மபி அணியில்  குமார் கார்த்திகேயா, ஷிமான்சு மந்திரி, ரகுவன்ஷி, புனீத், சரண்ஷ்  ஆகியோரும்,  அதேபோல் பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணியில் ஜெய்ஸ்வால், ஹர்திக், முலானி, அர்மன்,  துஷார், மோகித், தனுஷ் ஆகியோரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதனால் முன்னணி அணிகளை மண்ணைக் கவ்வ வைத்து  இறுதி ஆட்டத்தில் களம் கண்டுள்ள இந்த 2 அணிகளும் வலுவான அணிகளாக இருப்பதால் ரசிகர்களிடையே ‘யார் சாம்பியன்’ என்ற எதிர்பார்பை அதிக படுத்தியுள்ளது. மும்பை கிரிக்கெட் அணி ஒருக்காலத்தில் பாம்பே என்றும், மபி கிரிக்கெட் அணி ஹோல்கர் என்றும் அழைக்கப்பட்டன.  அவற்றையும் சேர்த்து இப்போது மும்பை 47வது முறையாகவும், மத்திய பிரதேசம் 12வது முறையாகவும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி இருக்கின்றன.

* அதிக முறை சாம்பியன்

மும்பை அணி இதற்கு மு ன்  46 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. அவற்றில் 41 முறை ரஞ்சிக் கோப்பையை மும்பை கைப்பற்றியுள்ளது. அத்துடன் அதிக முறை ரஞ்சிக் கோப்பையை வென்ற அணியாகவும் மும்பை திகழ்கிறது. மும்பை கடைசியாக 2016ல் கோப்பையை வென்றது. அதன்பிறகு 2017ல் பைனலில் விளையாடி உள்ளது.

* மபி வரலாறு

மத்திய பிரதேசம் இதுவரை 11 முறை பைனலுக்கு முன்னேறி உள்ளது. அவற்றில் 4 முறையும் ஹோல்கர் அணியாக தான் சாம்பியன் ஆனது. அதுமட்டுமல்ல இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய 11 தடவைகளில் 10 தடவை ஹோல்கர் என்ற பெயரில்தான் மபி விளையாடி  உள்ளது. மபி(ஹோல்கர்)  69ஆண்டுகளுக்கு முன்பு 1953ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக 1999ம் ஆண்டு பைனலில் விளையாடியது.

* நேருக்கு நேர்

இந்த 2 அணிகளும்  ரஞ்சித் தொடரில் கடைசியாக மோதிய  5 ஆட்டங்களில்  2015ல் நடந்த ஆட்டத்தில் 3விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வென்றது. மீதி 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. அதே நேரத்தில்  2016ல் நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டம் டிரா ஆனாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக மும்பை வெற்றிப் பெற்றது. ஆக இந்த 2 அணிகளுக்கும் இடையிலான கடைசி 5  ஆட்டங்களில் மும்பை 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

* பாம்பே-ஹோல்கர் பைனல்

ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டங்களில்  மபி(ஹோல்கர்), மும்பை(பாம்பே) அணிகள்  இதுவரை 4முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அதில் மும்பை 3 முறையும், மபி ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.

Related Stories: