1 லட்சத்துக்கு மாதம் 36,000 வட்டி தருவதாக பொதுமக்களிடம் மோசடி ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் 100 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்

* 70 வங்கி கணக்குகளையும் முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

* தலைமறைவாக உள்ள இயக்குநர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை: 1 லட்சத்துக்கு மாதம் 36 ஆயிரம் வட்டி தருவதாக பொதுமக்களிடம் பணம் வசூலித்த விவகாரத்தில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்துக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இயக்குநர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன உரிமையாளர் பி.ராஜசேகரன். இவரது நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை என தமிழகம் முழுவதும் உள்ளது. சென்னையில் மட்டும் 6  கிளைகள் உள்ளது.கடந்த மே 6ம் தேதி ஆரணி அருகே சேவூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன கிளை ஒன்று தொடங்கப்பட்டது. அந்த கிளை சார்பில் அளித்த விளம்பரத்தில் ₹1 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ₹36 ஆயிரம் வட்டி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நம்பி அப்பகுதி மக்கள் பலரும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய வங்கிகளே மிக குறைந்த வட்டி அளிக்கும் நிலையில், ₹1 லட்சத்துக்கு சாத்தியம் இல்லாத வகையில் 36 சதவீதம் வட்டி தருவது சாத்தியமற்றது என சமூக ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இந்த விளம்பரம் குறித்து அவர்கள் காவல் துறை, வருவாய் துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்படி ஆரணி சேவூர் பகுதியில் இயங்கி வரும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன அலுவலகத்தில் காவல், வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சேவூர் கிளையில் மட்டும் ₹1.50 கோடிக்கு மேல் பொதுமக்கள் முதலீடு செய்து இருப்பது உறுதியானது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கவனத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் கடந்த மே 24ம் தேதி திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் மோசடி உறுதியானதால், நிதி நிறுவன இயக்குநர்களான பாஸ்கரன், மோகன் பாபு, உஷா, ஹரிஷ், ராஜசேகர், செந்தில்குமார், பட்டாபிராமன், மிக்கல்ராஜ் ஆகிய 8 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 420, 120(பி) ஆர்பிஐ ஆக்ட் 58(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முதன்மை இயக்குநர்களான பாஸ்கரன், மோகன் பாபு ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.இதற்கிடையே சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கணக்காய்வு செய்தனர்.

 அதில், பொதுமக்களிடம் இதுபோல் பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆருத்ரா நிதி நிறுவன நிர்வாகிகளான பெண் உட்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவின் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: