அதிமுக பொதுக்குழு நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை ஓபிஎஸ்சின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்

சென்னை: அதிமுக பொதுக்குழு நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை மேலோங்கியுள்ளது. இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறி வருகிறார். ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இரண்டு தலைவர்களையும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இதனால் “மீண்டும் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அதனால் இப்போதைக்கு பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்” என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று முன்தினம் ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார்.இந்த கடிதத்துக்கு எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று பதில் அளித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில், “அதிமுக பொதுக்குழு 23ம் தேதி (நாளை) நடைபெற வேண்டும் என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இணைந்து முடிவு செய்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. அறிவித்தபடி நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. கண்டிப்பாக பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்று 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால் திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு நடைபெறும்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஓபிஎஸ் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்.

Related Stories: