அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கொடுத்தவர்களின் ரூ.22 கோடி மதிப்பிலான 15,000 காசோலைகள் ‘பவுன்ஸ்’; அறக்கட்டளை அதிகாரி பரபரப்பு தகவல்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை கொடுத்தவர்களின் ரூ.22 கோடி மதிப்பிலான 15,000 காசோலைகள் ‘பவுன்ஸ்’ ஆனதாக கூறப்படும் நிலையில், அதனை அறக்கட்டளை அதிகாரி உறுதிசெய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் ‘நிதி சமர்பன் யோஜனா’வின் சார்பில் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்டப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில், இதுவரை 3,400 கோடி ரூபாய் நன்கொடை வசூல் செய்யப்பட்டுள்ளது. கோயில் கட்டுவதற்காக நன்கொடை அளிப்பவர்கள் வங்கி காசோலைகளாக வழங்குகின்றனர். அந்த வகையில் ரூ.22 கோடிக்கும் அதிகமான 15,000 வங்கி காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளன. அயோத்தி மாவட்டத்தில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளன. நன்கொடையாளர்கள் கொடுத்த வங்கி காசோலையின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக மேலாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், ‘எந்தெந்த காசோலைகள் பவுன்ஸ் ஆனது, எத்தனை காசோலைகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறித்த காரணங்களை கண்டறிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பவுன்ஸ் ஆன காசோலைகளில், பல காசோலைகளில் எழுத்துப் பிழைகள் உள்ளன. இன்னும் பல காசோலைகளில் கையெழுத்து பொருந்தவில்லை. மேலும் தொழில்நுட்ப காரணங்களால் சில காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளன.

சிறுசிறு தவறுகள் உள்ள பவுன்ஸ் ஆன காசோலைகள் மீண்டும் வங்கியில் சமர்ப்பிக்கப்படும். ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நன்கொடை அளித்தவர்களின் எண்ணிக்கை 31,663 ஆக உள்ளது. அதேபோல் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை 1,428 பேர் நன்கொடை அளித்துள்ளனர். இது தவிர 950 பேர் ரூ.10 முதல் 25 லட்சம் ரூபாய் வரை நன்கொடை அளித்துள்ளனர். மேலும் ரூ.25 முதல் 50 லட்சம் ரூபாய் வரை 123 பேர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதுதவிர ரூ. 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை 127 பேர் நன்கொடை அளித்துள்ளனர். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 74 பேர் நன்கொடை அளித்து உள்ளனர்’ என்று கூறினார்.

Related Stories: