கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை; கிராமங்களுக்கு சாலை வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த எஸ்.அக்ரகாரம் கிராமத்துக்கு உட்பட்ட டிஎன்ஆர். கண்டிகை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் விவசாயிகளாகவும் விவசாய கூலி தொழிலாளர்களாவும் பணியாற்றி வருகின்றனர். இந்த கிராம பொதுமக்கள் பல வருடங்களாக ஏரிக்குள் இறங்கி நடந்து செல்லவேண்டிய நிலைமை உள்ளது. கடந்தாண்டு பெய்த கன மழையின்போது ஏரி நிரம்பிவிட்டதால் கிராம மக்கள் ஊருக்கு வெளியே செல்லவும் மீண்டும் ஊருக்கு வரவும் கடும் சிரமப்பட்டதுடன் வயல்வெளிகளில் உள்ள வரப்புகளை பயன்படுத்தி நடந்துவந்தனர். இதன் காரணமாக முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் தவித்துவந்தனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு மக்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா உடனடியாக கிராமத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். கிராமத்தின் அருகே உள்ள விகேஎன். கண்டிகை, அருந்ததி காலனி வழியாக சுமார் 2 கி.மீ. தொலைவிற்கு  அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதை புறம்போக்கு  நிலத்தின் வழியாக சாலை அமைக்க முடிவு செய்தனர். அந்த பாதையில் வளர்ந்திருந்த முட்புதர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி தற்காலிகமாக மண் சாலை அமைத்துக் கொடுத்தனர். விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். வருவாய் கோட்டாட்சியர் கூறும்போது, ‘’உடனடியாக இந்த பகுதியில் இரண்டு கி.மீ. தூரத்துக்கு சாலை அமைப்பதற்கு கலெக்டர் ஒப்புதல் அளித்துள்ளார்’ என்றார். இதனிடையே சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்ப ஜான் வர்கீஸ், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி கூறினர்.

Related Stories: