ஆலங்குடி அருகே ஊராட்சி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது-மாணவன் படுகாயம்

ஆலங்குடி : ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.களபத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 39 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியை மகாலட்சுமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று அப்பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் சுப்பிரமணி மகன் பரத் (9) என்ற மாணவன், பழுதடைந்த கட்டிடத்திற்குள் தனது புத்தகப் பையில் உள்ள பேனாவை எடுப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது, அந்த கட்டிடத்தின் மேற்கூரை எதிர்பாராத விதமாக திடீரென இடிந்து மாணவன் மீது விழுந்துள்ளது. இதில் காயமடைந்த மாணவனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்து, அங்கு சென்ற கறம்பக்குடி பிடிஓ., நளினி பழுதடைந்த கட்டடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: