தா.பழூர் அருகே சாலையில் ஆக்கிரமித்த கருவேல மரங்கள் அகற்றம்

தா.பழூர் : தா.பழூர் அருகே சீனிவாசபுரத்திலிருந்து காரைக்குறிச்சி செல்லும் சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை செய்தி தினகரனில் படத்துடன் வெளியானதை தொடர்ந்து கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமம். இந்த கிராமத்தில் காரைக்குறிச்சி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தாதம்பேட்டை, கூத்தங்குடி, இடங்கண்ணி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கும்பகோணம் செல்வதற்கு சீனிவாசபுரம் வழியாக காரைக்குறிச்சி செல்லும் சாலை. இந்த சாலை வழியாக பலரும் வேலை காரணமாக சென்று வருகின்றனர்.

மேலும் இந்த சாலை வழியாக தனியார் பள்ளி பஸ்கள் இயங்கி வருகின்றன. அந்த பகுதியில் உள்ள மக்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள், விதை, உரங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை இருபுறங்களிலும் கருவேல மரங்கள் சூழ்ந்து சாலையில் செல்பவர்கள் உடலில் கிழித்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் சாலையில் உள்ள தார் பெயர்ந்து பெரிய அளவிலான பள்ளங்கள், குண்டும், குழியுமாக இருப்பதால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூராக உள்ள கருவேல முள் மரங்களை அகற்றி சாலையை சரி செய்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது.

இதனையடுத்து கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவின் பேரில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் காரைக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து, கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். கருவேல முள் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: