×

ஆட்சேர்ப்பு விதிகளில் புதிய வழிகாட்டுதல் கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு தகுதியற்றவர்களா? பொதுத்துறை வங்கிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: மூன்று மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்கள் வங்கி பணியில் சேர ‘தற்காலிகமாக தகுதியற்றவர்கள்’ என்று அறிவித்த பொதுத்துறை வங்கியின் புதிய ஆட்சேர்ப்பு விதியைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை பொதுத்துறை வங்கி ஒன்று வெளியிட்டது. அதில், ‘3 மாதங்களுக்கும் மேலான கர்ப்பிணிப் பெண்கள் வேலை வாய்ப்புக்கு தகுதியற்றவர்கள்.

அவர்கள் மருத்துவ ரீதியாக வேலைக்குத் தகுதியற்றவர்கள். வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குழந்தை பிறந்த ஆறு வாரங்களுக்குப் பிறகு வங்கியில் நியமனம் செய்வதற்காக மறுபரிசீலனை செய்யப்படுவார்கள்’ என்று வங்கியின் விதிகள் தெரிவித்தன. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. வங்கியின் இந்த ஆள்சேர்ப்பு விதிகளுக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒரு பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தால், அவர் ‘தற்காலிகமாக தகுதியற்றவர்’ என்று கருதப்படுவார் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரால் உடனடியாக வேலையில் சேரமுடியாது என்றும் பொதுத்துறை வங்கி விதிகளை வகுத்துள்ளது.

இதனால், பெண்கள் பணியில் சேர்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் தங்கள் சீனியாரிட்டியையும் இழக்க நேரிடும். இது மிகவும் தீவிரமான விஷயம்; சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020-ன் கீழ் உள்ள மகப்பேறு நன்மைகளுக்கு முரணாக இந்த விதிகள் இருப்பதால், வங்கியின் இந்தச் செயல் பாரபட்சமானது மற்றும் சட்டவிரோதமானது. எனவே இந்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் மற்றொரு பொதுத்துறை வங்கியும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே போன்ற விதிகளை வெளியிட்டது. ஆனால் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு உடனடியாக திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Women's Commission ,Public Sector Bank , New guidelines in recruitment rules Are pregnant women unfit for work? Women's Commission Notice to Public Sector Bank
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றம்...