கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றி 40 அடி உயரத்திற்கு சாரம்: பராமரிப்பு பணி தொடங்கியது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் நடுவில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அன்று முதல் திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மாணவர்கள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெறவில்லை.

தற்போது ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்த 6-ம்தேதி முதல் நவம்பர் மாதம் 2-ம் தேதி வரை 5 மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.

இந்தநிலையில் பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 6ம் தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சென்னை, தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவை படகுகள் மூலம் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையை சுற்றி ரசாயன கலவை பூசுவதற்காக இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக திருவள்ளுவர் சிலையின் பீடத்தைச் சுற்றி இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது 40 அடி உயரத்துக்கு திருவள்ளுவர் சிலை பீடத்தின் வெளிப்புறத்தை சுற்றி சாரம் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது.

Related Stories: