வடுவூர் விளையாட்டரங்கில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி-ஆண்கள் அணியில் கஸ்டம்ஸ்,பெண்கள் பிரிவில் பிகேஆர் அணி வெற்றி

மன்னார்குடி : வடுவூரில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் ஈரோடு பிகேஆர் அணியும், ஆண்கள் பிரிவில் கஸ்டம்ஸ் அணியும் முதலிடம் பெற்று கோப்பைகளை வென்றது.திருவாரூர் மாவட்டம் வடுவூரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் தனித்தனியே கடந்த மூன்று நாட்களாக நடந்தது. வடுவூர் விளையாட்டு அரங்க வெளி வளாகத்தில் மின்னொளி அரங்கில் நடைபெற்ற போட்டியில் இதில், ஆண்கள் பிரிவில் வருமான வரித்துறை அணி, கஸ்டம்ஸ் அணி, ஜிஎஸ்டி அணி, இந்தியன் வங்கி அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி, தமிழ்நாடு போலீஸ் அணி, எஸ்ஆர்எம் அணி, ஈரோடு பிகேஆர் உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடியது. பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடந்தது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான இறுதி போட்டிகள் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இப்போட்டிகளை முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்எஸ் பழநிமாணிக்கம் எம்பி துவக்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் கஸ்டம்ஸ் அணி முதல் இடத்தையும், ஜிஎஸ்டி அணி 2ம் இடத்தையும், இந்தியன் வங்கி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.பெண்கள் பிரிவில், ஈரோடு பிகேஆர் முதல் இடத்தையும், சென்னை எஸ்ஆர்எம் அணி 2ம் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை அணி 3ஆம் இடத்தையும் பெற்றன.

பின்னர், நடந்த பரிசளிப்பு விழாவுக்கு பாரி பூபாலன் தலைமை வகித்தார். தொழிலதிபர் அன்புவேல்ராஜன் முன்னிலை வகித்தார். வடுவூர் கைப்பந்து கழக தலைவர் நாச்சியப்பன், செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் ரவி, வடுவூர் விளையாட்டு கழக தலைவர் ராஜராஜேந்திரன், செயலாளர் சாமிநாதன், ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

பரிசளிப்பு விழாவில், பூண்டி கலைவாணன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். மனோகரன் வரவேற்றார். நாராயணன் நன்றி கூறினார். கைப்பந்து இறுதி போட்டிகளை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்தனர்.

Related Stories: