×

‘தடுக்கப்பட வேண்டியது விபத்து, தடுக்காவிட்டால் ஆபத்து’ மஞ்சூர் அரசு பள்ளி மாணவரின் வாசகத்தை விழிப்புணர்வு வாசகமாக பயன்படுத்த வேண்டும்-டி.ஐ.ஜி.முத்துசாமி அறிவுறுத்தல்

மஞ்சூர் :  மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவரை கவுரவிக்கும் வகையில் மாணவர் எழுதிய தடுக்கப் படவேண்டியது விபத்து, தடுக்காவிட்டால் ஆபத்து என்ற கட்டுரை வாசகத்தை விழிப்புணர்வு வாசகமாக பயன்படுத்தபடும் என மேற்கு மண்டல டி.ஐ.ஜி.முத்துசாமி தெரிவித்தார்.நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி.ஆஷிஸ்ராவத், டி.எஸ்.பி.மகேஸ்வரன், மஞ்சூர் இன்ஸ்பெக்டர் துரை ராஜ், மாவட்ட குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிக்குமார் வரவேற்றார்.

இதில் மேற்கு மண்டல டி.ஐ.ஜி.முத்துசாமி கலந்து கொண்டு பேசியதாவது, கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகள் மூலம் தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 912 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் கொலைகளை விட சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சாலை விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காததாலேயே விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. சாலை விபத்துகளில் உயிரிழக்கும் குடும்பங்களின் நிலை மிகவும் கவலைகிடமானது.    

சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது மாணவ சமுதாயத்திடம் உள்ளது. அனைத்து வீடுகளிலும் குழந்தைகள் சொல்வதை பெற்றோர்கள் கேட்பார்கள். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்தாலே சாலை விபத்துகள் அடியோடு குறையும். சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சாலைப்போக்குவரத்து குறித்து கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி பரிசுகள் வழங்கினார். மேலும் தொலைதுார பகுதிகளில் இருந்து பள்ளிக்கு அரசு பஸ்சில் வரும் மாணவிகள் இருவருக்கு புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் மாணவர் யஸ்வந்தின் விழிப்புணர்வு கட்டுரையில் எழுதிய ‘தடுக்கப்பட வேண்டியது விபத்து, தடுக்காவிட்டால் ஆபத்து’ என்ற வாசகம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளது.

எனவே மாணவர் யஸ்வந்தை கவுரவப்படுத்தும் வகையில் ஊட்டி நகர் முழுவதும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாசகமாக எழுதி வைக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.ஆஷிஸ்ராவத்திடம் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மஞ்சூர் பஜாரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் இலவசமாக ஹெல்மெட்டுகளை டி.ஐ.ஜி.முத்துசாமி வழங்கினார். முன்னதாக மஞ்சூர் காவல் நிலையத்தை ஆய்வு செய்த டி.ஐ.ஜி முத்துசாமியை மஞ்சூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர்.

Tags : Manzoor Government School ,DIG ,Muthusamy , Manzoor: Manzoor Government High School student wrote in honor of the student should be prevented accident, danger if not prevented
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி