குமரி கார் டிரைவர் சவுதியில் மர்மச்சாவு-கொலை செய்யப்பட்டதாக மனைவி பரபரப்பு புகார்

நாகர்கோவில் :குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள இலவுவிளை கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் மார்ஷலின் (51). இவரது மனைவி சுஜா  (46). இவர் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் மார்ஷலின்.  டிரைவர் பணிக்காக கடந்த 2014ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். ஒரு சில ஆண்டுகளாக விசா, பெர்மிட் மற்றும் வேலை அனுமதி இல்லாமல் தனியாக ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10. 6. 2022 அன்று அவர் தங்கியிருந்த இடத்தில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

ஏற்கனவே அவர் தங்கியிருந்த பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த குமரி மாவட்டம் நடைக்காவு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், எனது கணவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. அந்த நபர் ஏற்கனவே எனக்கும், எனது குடும்பத்தினர் சிலருக்கும் போன் செய்து எனது கணவர் மார்ஷலின் உயிருடன் ஊருக்கு வரமாட்டார் என மிரட்டி வந்தார்.

இந்த நிலையில் எனது கணவர் ரத்த வெள்ளத்தில் அங்கு இறந்து கிடந்தது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. எனவே எனது கணவரை கொலை செய்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன் எனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து முறைப்படி இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்திட ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார் . அவருடன், அவரது குடும்பத்தாரும் உடன் வந்திருந்தனர்.

Related Stories: