பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்-கட்டிட தொழிலாளி கைது

ஓசூர் : பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு, தனியார் பஸ்சில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தொழிலாளியை கைது செய்தனர்.

தமிழக - கர்நாடக எல்லை பகுதியான ஜூஜூவாடி சோதனை சாவடியில், மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பெங்களூருவில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த  தனியார் பஸ்சை நிறுத்திய போலீசார், பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது பஸ்சில் இருந்து நபர் ஒருவர், போலீசாரை கண்டவுடன் இறங்கி தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரது உடமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அதில் ₹3 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கிருஷ்ணகிரி அடுத்த பசவண்ணா கோயில் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அன்பு (எ) வெங்கடேஷ் (40) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அவர் பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் இருந்து, 10 கிலோ கஞ்சாவை கிருஷ்ணகிரிக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.

Related Stories: