குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு?

டெல்லி : குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் மிகப்பெரிய தேசிய காரணத்திற்காக தாம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியில் முக்கிய இடத்தை வழங்கிய மம்தா பேனர்ஜிக்கு யஷ்வந்த் சின்ஹா நன்றி கூறியுள்ளார். இன்று டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும் போட்டியிட மறுத்துவிட்டனர். மம்தா பேனர்ஜி முன் மொழிந்த மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் பாஜக அரசின் நிதி அமைச்சராக இருந்தவரும் கடந்த ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான யஷ்வந்த் சின்ஹாவை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்யும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. சின்ஹாவின் ட்விட்டர் பதிவும் அதனை உறுதிப்படுத்தி உள்ளது.   

Related Stories: