வியாசர்பாடி சாஸ்திரி நகரில் கிடப்பில் போடப்பட்ட மீன் அங்காடி பணிகள்: மாற்று இடம் ஒதுக்கியும் பயனில்லை

பெரம்பூர்: வியாசர்பாடி சாஸ்திரி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மீன் அங்காடியால் துர்நாற்றம் வீசுவதுடன், மீன் கழிவுகளை வீடுகளின் முன்பு குவித்து வைப்பதால் சுகாதார கேட்டில் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, இந்த மீன் அங்காடியை இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 45வது வார்டுக்குட்பட்ட வியாசர்பாடி சாஸ்திரி நகரில் 17, 18 மற்றும் 19வது தெருக்களை உள்ளடக்கி பல ஆண்டுகளாக மீன் விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது. குறுகலான இந்த தெருக்களில் அருகருகே வீடுகள் உள்ளன. தினமும் இங்குள்ள மீன் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் மீன் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதால், அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், வீடுகளின் அருகே மீன் கழிவுகள் குவித்து வைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இங்குளள மீன் கடைகளை அகற்றி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், வேறு இடத்தில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். அதன்பேரில் கடந்த 2014ம் ஆண்டு இப்பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க சாஸ்திரி நகர் 16வது தெருவில் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், அதன் பிறகு அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டில் தவித்து வருகின்றனர்.

 இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குடியிருப்பு பகுதியில் மீன் அங்காடி உள்ளதால், தினமும் கண்விழித்து வீட்டை விட்டு வெளியே வந்தால், மீன் கழிவுகள் மற்றும் குப்பைகளை தாண்டி தான் செல்ல முடியும். ஆரம்பத்தில் ஓரிரு மீன் கடைகள் என வந்து தற்போது 3 தெருக்கள் முழுவதும் சுமார் 40  மீன் கடைகள் உள்ளன. காசிமேடு பகுதியில் உள்ளது போன்று மீன் வாடை எங்களுக்கு வந்துகொண்டே இருப்பதால் இரவில் நிம்மதியாக தூங்க முடியில்லை. இதுகுறித்து பல ஆண்டுகளாக போராடியும் எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை.

இங்குள்ள கடைகளை அகற்றி வேறு இடத்தில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அதற்கான எந்த ஒரு பணியும் நடைபெறாமல் தொடர்ந்து இந்த மீன் வாடையிலேயே வசித்து வருகிறோம். மழை காலங்களில் இந்த மீன் கழிவுகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லையால் எங்கள் பகுதியில் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து காணப்படும். எனவே, இங்குள்ள மீன் கடைகளை அகற்றி, இதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அங்காடி அமைத்து, மீன் விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

* குழந்தைகள் பாதிப்பு

வியாசர்பாடி சாஸ்திரி நகர் 17, 18, 19 ஆகிய தெருகளில் மீன் கடைகள் இயங்கி வருகிறது. இதில், 19வது தெருவில் அரசு மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்கள் இந்த மீன் கடைகளால் நாள்தோறும் பள்ளிக்கு செல்லும்போது  மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும், சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருப்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி தொற்று நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. வாடகை கிடையாது

இங்குள்ள 40க்கும் மேற்பட்ட கடைகள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால் கடைகளுக்கு என்று தனியாக வாடகை எதுவும் கிடையாது. குறிப்பிட்ட நபர்கள், மாதம்தோறும் ஒரு கடைக்கு 500 ரூபாய் வீதம் வசூலித்துக்கொண்டு, மாநகராட்சி அதிகாரிகள் முதல் கேள்வி கேட்கும் நபர்கள் வரை சரிகட்டி வருகின்றனர். மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அதிகாரிகளுக்கு சிறப்பு கவனிப்புகளும் வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: