நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் இன்று சர்வதேச யோகா தினம்: மைசூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, மைசூருவில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நாட்டின் 75 முக்கிய இடங்களில் அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில் 15,000 பேர் பங்கேற்கும் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது குறித்து பிரதமர் மோடி தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் தனது டிவிட்டரில், ``இந்தாண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக `யோகா மனித சமூகத்திற்கானது’ என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு யோகா தினத்தை வெற்றிகரமானதாக்கி அதனை மேலும் பிரபலமடைய செய்வோம்,’’ என்று கூறியுள்ளார். மோடியின் வருகையையொட்டி மைசூருவில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும் நிலையில், நாட்டின் முக்கிய இடங்களில் 75 அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் பிரதமர் மோடியுடன் மைசூருவில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை விமானப்படை தளத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லி புரணா கிலாவில், நகர மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செங்கோட்டையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகள் பங்கேற்கின்றனர்.இது தவிர, 79 நாடுகள், ஐநா அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Related Stories: