உலக கோப்பைக்கு 20 பேர் கொண்ட அணி: டிராவிட் அறிவிப்பு

பெங்களூரு: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு, 20 பேர் அடங்கிய உத்தேச இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில்  அக்.16ம் தேதி தொடங்க உள்ள  டி20 உலக கோப்பை தொடரில்,  முதல்முறையாக ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் காண இருக்கிறது. அவர் ஓய்வில்  உள்ள நிலையில், இந்திய அணி ரிஷப் பண்ட் தலைமையில் தென் ஆப்ரிக்காவுக்கு  எதிராக விளையாடியது. அடுத்து ஹர்திக் பாண்டியா தலைமையில்  அயர்லாந்து  அணிக்கு எதிராக இந்திய அணி மோத இருக்கிறது.  உலக கோப்பைக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் இன்னும் உத்தேச அணியை  பிசிசிஐ இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு  பிசிசிஐ நடத்திய டி20 உலக கோப்பையில்  இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் இந்த முறை வலுவான அணியை உருவாக்குவதில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தீவிரமாக இருக்கிறார்.

இந்நிலையில்,  தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடருக்கு பிறகு பேசிய திராவிட், ‘உலக கோப்பை போட்டி  நெருங்கி வரும் நிலையில் அணியை இறுதி செய்ய வேண்டி உள்ளது. இப்போதைய  சூழலுக்கு ஏற்ப சில தற்காலிக நடவடிக்கைகள் தேவைப்படலாம். ஆனாலும் 15 பேர்  கொண்ட அணியைதான் உலக கோப்பைக்கு அழைத்துச் செல்ல முடியும்.  இருந்தாலும்    உலக கோப்பைக்கு முன்னோட்டமாக 18 முதல் 20 பேரை இறுதி செய்ய வேண்டி உள்ளது. காயங்கள்  உட்பட சில காரணங்களால் அந்த 20 பேரில் சில மாற்றங்கள் இருக்கலாம்.  ஆனால் அணியை இறுதி செய்யும் பணியை விரைவில் தொடங்க  இருக்கிறோம்’ என்று  கூறினார்.

Related Stories: