மனிதநேய கருத்து...சாய் பல்லவிக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், சாய் பல்லவி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘காஷ்மீரில் பண்டிட்கள் கொல்லப்படுவதும், வடநாட்டில் மாட்டிறைச்சியை காரணம் காட்டி முஸ்லிம்கள் கொல்லப்படுவதும் மத வன்முறை’ என்ற கருத்தை சொல்லியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும், ‘காஷ்மீர் தீவிரவாதிகளை, பசு பாதுகாவலர்களுடன் ஒப்பிடுவதா?’ என்று சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து சாய் பல்லவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் புகார் அளித்தனர். இந்நிலையில், தன்னை எதிர்ப்பவர்களுக்கு சாய் பல்லவி விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. சமீபத்தில் நான் அளித்த பேட்டி ஒன்றில், ‘நீங்கள் வலதுசாரி ஆதரவாளரா? இடதுசாரி ஆதரவாளரா?’ என்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் நடுநிலையானவள்’ என்று பதில் சொன்னேன்.

‘முதலில் நாம் மனிதநேயம் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். பிறகுதான் நமது அடையாளங்கள் எல்லாம்’ என்று சொன்னேன். எதுவாக இருந்தாலும், ஒடுக்கப்பட்டவர்கள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவகையில் வன்முறை நிகழ்ந்தாலும் அது தவறுதான். எந்த மதத்தின் பெயரில் அது நிகழ்ந்தாலும் அது பெரிய குற்றம்தான். இதுதான் நான் சொல்ல வந்த கருத்தின் சாராம்சம்’ என்றார்.  இந்நிலையில் நடிகை விஜயசாந்தி, சாய் பல்லவியை மிரட்டும் தொனியில் அவர் சொன்னது தவறு என கருத்து கூறியிருந்தார். இப்போது இது பற்றி தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ‘முதலில் மனிதநேயம்தான். சாய் பல்லவி தைரியமாக இருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: