ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலை குறித்து சமரச கூட்டம் விவசாயிகள் வெளிநடப்பு; அதிகாரிகளிடம் வாக்குவாதம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலை சம்பந்தமாக அதிகாரிகள்,  விவசாயிகள் சமரச கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது  விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளியேறியதால் கூட்டம் பாதியில் முடிந்தது. திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம்  சித்தூர் வரை  128 கி.மீ. தூரத்திற்கு ₹3200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க, ஒன்றிய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக, ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகிறது. மேலும்,  ஆலப்பாக்கம் பகுதியில் 6 வழிச்சாலைக்காக கடந்த 14ம் தேதி  சாலை பணிகள் செய்தனர்.  இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக சாலை  பணிகள் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், ேநற்று முன்தினம் முப்போகம் விளையும் நிலத்தை சீரழித்து குடிநீர் ஆதாரங்களை சேதாரம் செய்து அமைக்க உள்ள தச்சூர் - சித்தூர் 6 வழிச்சாலை பணிகளை உடனே நிறுத்த வேண்டும். மாற்றுப்பாதையில் சாலை அமைத்திட வேண்டும் என  விவசாயம் காத்திட போராடி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக சிபிஐஎம் மற்றும் ஊத்துக்கோட்டை நஞ்சை நல  விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் மோட்டார் சைக்கிள்  பிரசாரமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலை சம்பந்தமாக சமரச கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், திட்ட இயக்குனர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜன்,  தாசில்தார் ரமேஷ், டிஎஸ்பி சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் `6 வழிச்சாலைக்கு முப்போகம் விளையக்கூடிய எங்கள் நிலத்தை தரமுடியாது’ என கூறினர்.  இதை கேட்ட திட்ட இயக்குனர் பிரசாந்த் கூறும்போது,  `நீங்கள் நாட்டு முன்னேற்றத்திற்கு எதிரானவர்கள். தேச விரோதிகள்’ என பதிலளித்தார்.  

இதை கேட்ட அனைத்து விவசாயிகளும் `எங்களை எப்படி நீங்கள் தேச விரோதிகள் என கூறலாம்.  அதை வாபஸ் பெறுங்கள்’  என கூறி மாற்று பாதையில் 6 வழி சாலையை  கொண்டு செல்லும்படி கூறினர். இதையடுத்து, அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதையறிந்த அதிகாரிகள், கூட்டத்தில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டதால்,  கூட்டத்தை முடிக்காமலே சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து பின்னர் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் 6 வழிச்சாலைக்காக பணிகள் தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் என தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: