தனது சகோதரியை ஏமாற்றிவிட்டு 3வது திருமணம் செய்ய சிங்கப்பூர் காவலர் முயற்சி: டிஜிபி அலுவலகத்தில் சகோதரர் புகார்

சென்னை: திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர், சென்னை டிஜிபி அலுவலகத்தில்  நேற்று அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனது சகோதரி தஸ்லிமா பர்வின். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் பழைய நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த முகமது ரபீக் என்பவருக்கும் கடந்த 2016 ஜனவரி 23ம் தேதி சிங்கப்பூரில் திருமணம் நடந்தது. முகமது ரபீக் தற்போது சிங்கப்பூர் குடியுரிமை பெற்று சிங்கப்பூர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு 100 சவரன் நகைகள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் சிங்கப்பூர் பணம் கொடுத்தோம்.

எனது சகோதரி திருமணமான நாள் முதல் கணவர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களில் எனது தங்கையின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மனம் வருந்தத்தக்க வகையில் பேசியும் துன்புறுத்தியும் வந்தனர். பிறகு வலுக்கட்டாயமாக ஒரு மாதத்தில் இந்தியாவிற்கு அனுப்பிவிட்டனர். பிறகு ஒரு மாதத்தில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினர். பிறகு விவாகரத்தும் வாங்கிவிட்டனர். ஆனால் திருமணத்தின் போது போட்ட நகைகள் மற்றும் பணத்தை திரும்ப தரவில்லை.

முகமது ரபீக் 2வதாக தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அவர்களையும் ஏமாற்றி விட்டார். கடந்த 3ம் தேதி 3வது திருமணம் செய்ய முகமது ரபீக் நீடாமங்கலம் வந்திருந்தார். நாங்கள் அவரை சந்தித்து பேசினோம். ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தோம். புகாரின் படி போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: