சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: கோவை மக்களின் குடிநீர் தேவையை தீர்க்க சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை திறந்துவிட்டமைக்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நேற்று முன்தினம் எழுதிய கடிதத்தில், சிறுவாணி குடிநீர் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்ட பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிடவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், கேரள முதல்வர் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.  

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசு, சிறுவாணி அணையிலிருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியன் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை நேற்று உடனடியாக திறந்துவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைத்ததற்காகவும், இரு மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி சிறுவாணி அணையிலிருந்து வேண்டிய நீரினை வழங்கியமைக்காகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

* உலக அகதிகள் தினம் இலங்கை தமிழர் குடியுரிமை கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை: முதல்வர் டிவிட்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000ம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20ம் நாள், உலக அகதிகள் தினம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு. உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றம் செய்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்வுரிமை - குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: