கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் கோடைகால பயிற்சி வகுப்பு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

சென்னை: கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் கோடைகால பயிற்சி வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்கள் கிராமப்புற பள்ளி மாணவர்களை சென்றடையும் வகையில் கோடைகால பயிற்சி வகுப்பை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஜூன் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்துகிறது. இந்த திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னை ஐஐடியில் தொடங்கி வைத்தார். ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, ஐஐடி மெட்ராஸ் மின்சார பொறியியல் துறை பேராசிரியர்களான சாரதி, அன்பரசு மணிவண்ணன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: இந்த பயிற்சி பெருமளவில் ‘கற்றல் விளைவுகளை’ மேம்படுத்தும். இத்திட்டத்திற்காக மாணவர்களை தேர்வு செய்யும்போது, பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வித்துறை முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த திட்டத்தில் 70% நடைமுறை கூறுகளாகவும், எஞ்சியவை கோட்பாடாகவும் அமைந்துள்ளன. முக்கியமான காப்புரிமை பற்றி மாணவர்களும் அறிந்து கொள்வார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதை தொடர்ந்து சென்னை ஐஐடி இயக்குனர்  காமகோடி கூறியதாவது: தற்போது 100 மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று உள்ளனர். ஆனால், ஒரு லட்சம் மாணவர்களை சென்றடைவதுதான் எங்கள் நோக்கம். மாணவர்கள் தங்கள் வகுப்புகளில் நிறைய கோட்பாட்டைக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் செய்முறை வகுப்புகளும் முக்கியம், கல்வி நிறுவனங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதில்லை. இந்த பயிற்சி வகுப்பின்போது வீடுகளில் கூட செய்முறைகளைச் செய்ய உதவும் கருவிகளை நாங்கள் வழங்குகிறோம். இந்த 100 மாணவர்களும் ஐஐடி மெட்ராஸில் பட்டம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இவ்வாறு அவர் கூறினார். அரியலூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் படிக்கும் 100 மாணவர்கள் ‘இருப்பிட கோடைகால பயிற்சி’க்காக ஐஐடி மெட்ராஸ் வந்துள்ளனர். இத்திட்டத்திற்காக 100 மின்னணு பரிசோதனைகளை மாணவர்கள் மேற்கொள்ளும் வகையில் சிறப்புக் கருவி ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: