×

4 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு வருகிறது: அறிவிப்பை வெளியிட்டது வேதாந்தா

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 4 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு ரூ.1500 கோடி மதிப்பீட்டில்  காப்பர் உற்பத்திக்காக வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் தொடங்கிய ஸ்டெர்லைட் ஆலைக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல்  நாட்டினார். ஆரம்பத்தில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து அலுவலகம் செயல்பட்டது.

பின்னர் சிப்காட் வளாகத்தில் பல ஏக்கர் பரப்பளவில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் கட்டப்பட்டு, 1996 முதல் காப்பர் உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆலை தொடங்கப்படுவதற்கு முன்னரே, இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து விரட்டப்பட்ட இந்த ஆலை தமிழ்நாட்டிலிருந்தும் விரட்டப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடிக்கு நடைபயணம் மேற்கொண்டார்.

திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இந்த ஆலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்  2018 மே 22ம் தேதி ஆலை விரிவாக்கத்துக்கு தடை கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மீது நடந்த  துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. மே 28ம்  தேதி அப்போதைய தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நீதிமன்றங்கள் மூலம் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனால் இனி ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் திறக்க முடியாது  என்று முடிவு செய்த நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை  நிர்வாகம், ‘‘ஸ்மெல்டர் காம்ப்ளெக்ஸ் (முதன்மை மற்றும் இரண்டாம்  நிலை), சல்பரிக் ஆசிட் தொழிற்சாலை, காப்பர் ரீபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளான்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளான்ட், எப்ளூயன்ட் டிரீட்மென்ட் பிளான்ட், கேப்டிவ் பவர் பிளான்ட், ஆர்ஓ யூனிட்கள், ஆக்சிஜன் ஜெனரேசன் யூனிட், குடியிருப்பு வளாகம் ஆகியவற்றை விற்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆலையை வாங்க திறன் படைத்த தரப்பினர் வருகிற ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி தெரிவித்துள்ளது.

Tags : Vedanta , Thoothukudi Sterlite plant, which has been closed for more than 4 years, is for sale: Vedanta announces
× RELATED வேதாரண்யத்தில் அறிவியல் இயக்கத்தின் துளிர் தேர்வு