×

தேர்தல் ஆணையம் அதிரடி அங்கீகரிக்காத 111 கட்சிகளின் பதிவை ரத்து செய்ய முடிவு

புதுடெல்லி: தகவல் தொடர்பு விவரம் இல்லை, கொடுத்த முகவரில் கட்சி அலுவலகம் இல்லை போன்ற காரணங்களால் அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சுமார் 2,8000 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கட்சிகள் பெயரளவில் மட்டுமே அரசியல் கட்சியாக உள்ளன. அப்படிப்பட்ட கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. ஆனால், அரசியல் கட்சிகளுக்கான வரிச்சலுகை, கட்சி நிதி பெறுவது போன்ற பலன்களை மட்டுமே பெற்றுக் கொள்கின்றன. இதுபோன்ற கட்சிகளை களை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, சம்மந்தப்பட்ட கட்சிகளின் தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. அனைத்து கட்சிகளும் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிவேட்டில் இத்தகைய ஆவணங்கள் இல்லாத 87 கட்சிகளின் பதிவை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் நீக்கியது. இந்நிலையில், மேலும் 111 கட்சிகளின் பதிவை நீக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. அதே சமயம், சம்மந்தப்பட்ட கட்சிகள் அவர்களின் இருப்பிடத்திற்கான சரியான முகவரி ஆவணம், ஆண்டு வாரியான வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், பங்களிப்பு அறிக்கை, செலவு அறிக்கை மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை 30 நாட்களுக்குள் அணுகி ஆவணங்களை தந்தால், பதிவு நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இக்கட்சிகளின் பதிவு நீக்கப்படுவதன் மூலம், இந்தக் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் திரும்பப் பெறப்படும்.


Tags : Election Commission , The Election Commission has decided to cancel the registration of 111 parties who did not recognize the action
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...