×

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுலிடம் மீண்டும் விசாரணை: 4வது நாளாக அமலாக்கத்துறையிடம் ஆஜர்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 4வது நாளாக நேற்று விசாரணை நடத்தியது. மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது தொடர்பாக, பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,  டெல்லி  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்தது. அவரிடம் மூன்று நாட்களில் சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதையடுத்து சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவகாசம் கோரியதை தொடர்ந்து ஜூன் 20ம் தேதி(நேற்று) ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் சம்மன் அனுப்பட்டது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி நேற்று 4வது நாளாக டெல்லி அப்துல் கலாம் சாலையில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். காலை சுமார் 11.15 மணிக்கு ஆஜரான ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவு 8.15 மணி வரை விசாரணை நடத்தினர். பின்னர் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவும் சம்மன் தரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தரில் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

* ஜனாதிபதியிடம் மனு
டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து மனு கொடுத்தனர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பாகேல், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து, அக்னிபாதை திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து நடந்த போராட்டத்தில் போலீசார் காங்கிரஸ் தலைவர்களிடம் மோசமாக நடந்து கொண்டது குறித்தும் புகார் அளித்தனர். முன்னதாக கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை ஒற்றுமை பேரணி நடத்தினர். அங்கு அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Tags : Rahul ,National Herald ,Azhar , National Herald case: Rahul re-investigated: Azhar to 4th day of enforcement
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்