அக்னிபாதை குறித்து பிரதமர் மோடி சூசகம் தவறாக தெரியும் முடிவுகள் எதிர்காலத்தில் பலன் தரும்

பெங்களூரு: ‘‘ஆரம்பத்தில் தவறாக தெரியும் சில முடிவும், எதிர்காலத்தில் தேசத்தை கட்டமைக்கும்’’ என பெங்களூருவில் பிரதமர் மோடி பேசி உள்ளார். அக்னிபாதை திட்டம் குறித்து நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று பெங்களூரு சென்றார். அங்கு, புறநகர் ரயில்வே திட்டம் உள்ளிட்ட ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து பெங்களூரு கொம்மஹட்டாவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, கன்னட மொழியில் பேச்சை தொடங்கி மாநில மக்களுக்கும் பெங்களூரு மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘‘கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ அரசு சிறப்பாக செயல்படுகிறது. இங்கு, மிகவும் நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த புறநகர் ரயில் திட்டத்திற்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி கர்நாடகாவில் 7 ரயில்வே திட்டங்கள், 4 தேசிய நெடுஞ்சாலை திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பெங்களூரு போக்குவரத்து நெருக்கடிக்கு மிக விரைவில் தீர்வு கிடைத்து விடும். சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும். ஆனால் காலப்போக்கில் அவை தேசத்தை கட்டியெழுப்பும்’’ என்றார்.

* முப்படை தளபதிகள் இன்று விளக்கம்

அக்னிபாதை திட்டம் எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்படாது என முப்படை தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் தொடர்பாக முப்படை தளபதிகள் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

Related Stories: