வாரணாசி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கொரோனா அறிவிப்பு

வாரணாசி: வாரணாசி விமான நிலையத்தில் ஆங்கிலம், இந்தியுடன் புதிதாக சமஸ்கிருதத்தில் கொரோனா விதிமுறைகள் குறித்த அறிவிப்பு ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமானம் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, பயணிகளுக்கான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 3வது மொழியாக சமஸ்கிருதத்திலும் தற்போது அறிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, வாரணாசி விமான நிலையத்தின் இயக்குநர் ஆர்யமா சன்யால் கூறுகையில், ‘‘பழங்காலம் முதலே வாரணாசி சமஸ்கிருத மொழியின் மையமாக திகழ்கிறது. எனவே சமஸ்கிருதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த முயற்சியை தொடங்கி உள்ளோம்’’ என்றார். சமஸ்கிருத அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சிலர் வாரணாசி ரயில் நிலையத்திலும் சமஸ்கிருதத்தில் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். வாரணாசி, பிரதமர் மோடியின் சொந்த மக்களவை தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: