×

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவது அவசியம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேச்சு

சென்னை: உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவது விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தில் நேற்று, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொகுப்பு அளவிலான வணிக நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, தொகுப்பு அடிப்படையிலான வணிக நிறுவனங்கள், துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

ஆய்வின் போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:  சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் கூட்டாக பயிர் சாகுபடி திட்டம் தயாரித்து, அதற்கு தேவையான இடுபொருட்களை மலிவு விலையில் பெற்று உற்பத்தி செய்யும் 2 விளைபொருட்களை ஒருங்கிணைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்திடவும், மேலும் அதிக வருமானம் பெறுவதற்கு விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கும்  உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அணுகுமுறை உருவாகியது. தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய 903 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் மேலும் சிறந்திட தொகுப்பு அடிப்படையிலான வணிக நிறுவனங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவது அவசியமாகின்றது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஜனநாயக மரபுப்படி, வெளித்தன்மையுடன் செயல்படுவது உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், ஈடுபாட்டையும் பெரிதும் வளர்க்கும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவது விவசாயிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும். மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி போன்ற செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய தொகுப்பு அளவிலான வணிக நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள், வணிக ரீதியான விவரங்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்.

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாட்டினை சீரமைப்பது அவசியம். தமிழக அரசு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பயிற்சி வழங்கிட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்டந்தோறும் தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இப்பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். 3 உணவு பதப்படுத்துதல் திட்டத்திலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பெறுவதற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திட்ட கருத்துருவில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானியம் பெற்றிடலாம். பொதுவான உட்கட்டமைப்பு வசதிக்காக அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை மானியம் பெற்றிடலாம். இவ்வாறு பேசினார்.


Tags : Minister ,MRK Panneer , Agrarian companies need to act with foresight: Minister MRK Panneer wealth talk
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...