×

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு பிளஸ் 2வில் 93.76% 10ல் 90.07% தேர்ச்சி: வழக்கம் போல் மாணவர்களை முந்தினர் மாணவிகள்; 10ம் வகுப்பில் கன்னியாகுமரி, பிளஸ் 2வில் பெரம்பலூர் முதலிடம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார். வழக்கம் போல மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பில் 90.07 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் 93.76 சதவீத தேர்ச்சியை இந்த ஆண்டில் மாணவ -மாணவியர் எட்டியுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடத்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று காலை 10 மணி அளவில் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12,714 பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்த 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவ-மாணவியர்,  கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். அவர்களுக்காக தமிழகத்தில் 3081 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 38 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டன. அதில், 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் மாணவியர். 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் மாணவர்கள். ஒருவர் மாற்றுப் பாலினத்தை சேர்ந்தவர். இவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 90.07 சதவீதம். மாணவியர் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி(94.38%) பெற்றுள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர்(85.83%) தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர் 8.55 சதவீதம்  அதிகமாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் 6016 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதி 5424 பேர்(90.15%) தேர்ச்சி பெற்றுள்ளனர். 242 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில் 133 பேர்(54.95%) தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்திருந்தும்  42 ஆயிரத்து 519 பேர் பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்கவில்லை.

பிளஸ் 2: தமிழகம், புதுச்சேரியில் 7,499 மேனிலைப் பள்ளிகளில் படித்த  பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு, கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர் பங்கேற்றனர். அவர்களில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் மாணவியர். 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர் மாணவர்கள். தேர்வு எழுதியோரில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 பேர் (93.76%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவியர் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105(96.32%), மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893(90.96%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர் 5.36% அதிகம் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 2,628 மேனிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளன. 246 அரசு மேனிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. பிளஸ் 2 தேர்வில் மாற்றுத் திறன் மாணவர்கள் 3095 பேர் பங்கேற்றனர்; அவர்களில் 2824(91.24%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 74 பேர் பங்கேற்று, 71 பேர்(95.94%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு எழுத பதிவு செய்திருந்தும் 31 ஆயிரத்து 034 பேர் தேர்வில் பங்கேற்க வரவில்லை.

பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் அனைத்து வகைப் பள்ளிகளின் தேர்ச்சியை பொறுத்தமட்டில், கன்னியாகுமரி மாவட்டம் 97.22 சதவீத தேர்ச்சியை பெற்று முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 97.15 சதவீத தேர்ச்சியை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் 95.96 சதவீத தேர்ச்சியை பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல, பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.95 சதவீத தேர்ச்சியை பெற்று மாவட்ட த்தில் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீத தேர்ச்சியை பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 97.02 சதவீத தேர்ச்சியை பெற்று மாவட்டத்தில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

மேற்கண்ட பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை எழுத பதிவு செய்துவிட்டு தேர்வு எழுத வராமல் விட்ட மாணவர்கள் நிலைமை குறித்து ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு  முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியல் ஓரிரு நாளில் தயாரிக்கப்படும். தேர்வில் வெற்றி, தோல்வி என்ற மனப்பாங்கு மாணவர்களுக்கு வரக்கூடாது. அடுத்து வரும் தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம். அதற்காக ஜூலை 27ம் தேதி துணைத் தேர்வுகள் பிளஸ்2 க்கு தொடங்கும். பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும். மேற்கண்ட தேர்வுகளை எழுதிய மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை 24ம் தேதி முதல் இணை தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு
* தமிழகத்தில் உள்ள 4006 அரசு பள்ளிகளில், 886 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. மேலும், அரசுப் பள்ளிகள் 85.25%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01%, தனியார் பள்ளிகள் 98.31%, இருபாலர் பள்ளிகள் 90.37%, பெண்கள்- 93.80%, ஆண்கள்- 79.33% தேர்ச்சி பெற்றுள்ளன.
* பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் 45 பேர், கணக்கில் 2186 பேர், அறிவியல் 3841 பேர், சமூக அறிவியல் 1009 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மொழிப்பாடத்தில் 94.84%, ஆங்கிலம் 96.18%, கணக்கு 90.89%, அறிவியல் 93.67%, சமூக அறிவியல் 91.86% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* தமிழகத்தில் முதல்முறையாக 10ம் வகுப்பு தமிழில் 100க்கு 100 மார்க் திருச்செந்தூர் பள்ளி மாணவி சாதனை
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியானது. இதில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா, தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது தமிழகத்தில் இதுவே முதல்முறையாகும். மாணவி துர்காவின் தந்தை செல்வக்குமார், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக உள்ளார்.

மாணவி துர்கா கூறியதாவது: பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது. ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைப்பதன் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு அவர்களை தயார் செய்ய முடியும். எங்கள் பள்ளியில், ஆங்கில மொழியில் பேச வேண்டும் என்று ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதில்லை என்றார்.
மதிப்பெண்
தமிழ்    100
ஆங்கிலம்    96
கணிதம்    87
அறிவியல்    79
சமூக அறிவியல்    86

 பிளஸ் 2
* பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகள் 89.06%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.87%, தனியார் சுயநிதிப் பள்ளிகள்99.15%, இருபாலர் பள்ளிகள் 94.05%, பெண்கள் பள்ளிகள் 96.37%, ஆண்கள் பள்ளிகள் 86.60% தேர்ச்சியை பெற்றுள்ளன.
* பாட வாரியான தேர்ச்சி வீதம்: அறிவியல் பாடப் பிரிவுகள் 95.51%, வணிகவியல் பாடப் பிரிவுகள் 92.51%, கலைப் பிரிவுகள் 85.13%, தொழிற்பாடப் பிரிவுகள் 84.26% தேர்ச்சி பெற்றுள்ளன.
* முக்கிய பாடங்களின் தேர்ச்சி வீதம்: இயற்பியல்  -96.47%, வேதியியல் - 97.98%, உயிரியல்-98.89%, கணக்கு- 97.29%, தாவரவியல்- 95.34%, விலங்கியல்- 96.01%, கணினி அறிவியல் - 99.39%, வணிகவியல்- 96.31%, கணக்குப் பதிவியல் - 93.76%.
* 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை: இயற்பியல் 634, வேதியியல் 1500, உயிரியியல் 1541, கணக்கு1558, தாவரவியல் 47, விலங்கியல் 22, கணினி அறிவியல் 3827, கணக்குப் பதிவியல்  4540, பொருளியல் 1146, கணினிப் பயன்பாடுகள் 2818, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் 1151.

பிளஸ் 2 பாட தொகுதி (குரூப்) வாரியாக தேர்ச்சி வீதம்
* அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 4 லட்சத்து 90 ஆயிரத்து 436 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 332 பேர் (95.51%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 58 ஆயிரத்து 570 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 216 பேர் (92.51%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* கலைப் பிரிவு பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 442 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 11 ஆயிரத்து 443 பேர் 85.13%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* தொழிற் பாடத் தொகுதியின் கீழ் 43 ஆயிரத்து 919 பர் தேர்வு எழுதி, 37007 பேர் (84.26%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags : Kanyakumari ,Perambalur , General Exam Results Publication Plus 2 93.76% 10 out of 90.07% Pass: Students outperformed students as usual; Kanyakumari in 10th class, Perambalur first in Plus 2
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...