×

திங்கள்நகரிலும் ரூ.1.43 லட்சம் மோசடி; குமரியில் தலைமறைவாக உள்ள இளம்பெண் மீது குவியும் புகார்கள்: போலி நகைகள் விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள்

திங்கள்சந்தை: போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்த விவகாரத்தில் தேடப்படும் இளம்பெண், திங்கள் நகரிலும் ரூ.1.43 லட்சம் வரை ேமாசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.  நாகர்கோவில் செட்டிக்குளம் கணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜா (46). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனங்களில் போலி நகைகள் அடகு வைத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக கொற்றிக்கோடு, கருங்கல், புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

சமீபத்தில் குமாரபுரம் அருகே உள்ள செங்கொடி பகுதியை சேர்ந்த சுரேஷ் (38) என்பவர், சித்திரங்கோட்டில் நடத்தி வரும் நகை அடகு நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து பணத்தை பெற்ற ஜேசுராஜா மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜேசுராஜாவின் மனைவி அனிஷா (34) மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனிஷாவும், ஜேசுராஜாவுடன் சென்று பல இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். ஜேசுராஜாவுக்கு நாகர்கோவில் கணபதிநகர், ஆசாரிப்பள்ளம் பகுதியில் பங்களா வீடுகள் உள்ளன. சமீபத்தில் தான் ஆசாரிபள்ளத்தில் புதிதாக வீடு கட்டி அனிஷாவை தங்க வைத்தார். அனிஷா மீதும் மோசடி வழக்கு உள்ளதால், அவரை காவல்  துறையினர் ேதடி  வருகிறார்கள்.

ஜேசுராஜா, அனிஷா ஆகியோரின் மோசடி வெளியாகி உள்ளதால், இவர்களிடம் நகைகளை வாங்கி பணம் கொடுத்த அடகு நகை கடைக்காரர்கள் அந்த நகைகளை பரிசோதனை செய்து, அவை போலி என்பது தெரிய வந்ததால் காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர். தற்போது திங்கள்நகர் அருகே உள்ள நகை அடகு நிறுவனத்திலும் இவர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள தலக்குளம் புதுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெனின் (38).   இவர் திங்கள்நகர் ஆரோக்கியபுரம் பகுதியில் தங்க நகை அடகு பிடிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 3ம் தேதி இவரது நிறுவனத்துக்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் டிப் டாப் உடையில் வந்தார். அவர், சுமார் 19 கிராம் எடை கொண்ட ஒரு வளையலை அடகு வைத்து, ரூ.68 ஆயிரம் பெற்று சென்றார். அதில் தனது பெயர் சந்தியா, கணவர் பெயர் விஜி, செட்டித்தெரு, இரணியல் என்ற முகவரியை அந்த இளம்பெண் கொடுத்திருந்தார்.

இதுபோன்று கடந்த 6ம் தேதி அதே இளம்பெண், ஜெனின் இல்லாத சமயத்தில் அவரது நிறுவனத்துக்கு வந்து ஜெனின் தம்பி ஜெயனிடம் (36) சுமார் 21.5 கிராம் எடை கொண்ட 2 வளையல்களை கொடுத்து ரூ.75 ஆயிரம் பெற்று சென்றார்.  அதில் தனது பெயர் சைலஜா, கணவர் பெயர் சஜீவ், கோகுலம், இரணியல் மெயின் ரோடு என முகவரி கொடுத்து சென்றார்.

இதற்கிடையே போலி நகை விவகாரத்தில் ஜேசுராஜா, அவரது மனைவி அனிஷாவின் மோசடி தகவல்கள் பரவியதை தொடர்ந்து ஜெனின், ஏற்கனவே தனது நிறுவனத்துக்கு வந்த நகைகளை பரிசோதனை செய்த போது அதில் அந்த இளம்பெண் வைத்த நகைகள் போலி என்பது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமராவை பரிசோதனை செய்த போது அனிஷா தான் போலி முகவரிகளை கொடுத்து போலி நகைகளை வைத்து பணம் பெற்று சென்று மோசடி செய்தது உறுதியானது.
 
இதையடுத்து ஜெனின் தற்போது இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ெமாத்தம் ரூ.1.43 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் அனுஷா மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

மேலும் பல்வேறு நகை அடகு நிறுவனத்தில் ஜேசுராஜாவும், அனிஷாவும் மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே  இன்னும் அதிகளவில் புகார்கள் வர வாய்ப்பு உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். தலைமறைவாகியுள்ள அனுஷாவை கைது செய்தால் எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என்பது தெரிய வரும் என கூறப்படுகிறது.  

சொகுசு காரில் வலம் வந்த ஜோடி:அனுஷா, ஜேசுராஜா இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்து சென்றே போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளனர். ஒரு சில சமயங்களில் தனித்தனியாக சென்றுள்ளனர். தனியாக செல்லும் சமயங்களில் அனுஷா, சொகுசு காரில் டிப் டாப் உடையில் சென்றுள்ளார். மிகவும் நாகரீகமான பேச்சால், அங்கிருந்தவர்களை மயக்கி நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளார். விலை உயர்ந்த செல்போன், சொகுசு கார் என இவரை பார்த்ததும் இவர் ெகாடுத்த நகைகளை பரிசோதிக்காமல் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

செம்பு வளையல்கள்: இந்த மோசடி தம்பதியினர், வளையல்களை தான் அதிகளவில் கொடுத்துள்ளனர். செம்பு வளையலில் தங்க முகாம் பூசி ஏமாற்றி உள்ளனர். கம்மல், செயின் போன்றவற்றை மோசடி செய்வதை விட வளையல் வைத்து எளிதில் ஏமாற்றி விட முடியும் என்பதால், வளையல்களை தான் தங்களது மோசடி திட்டத்துக்கு பயன்படுத்தி உள்ளனர்.

ஆதார் அட்டை அவசியம்: ஜெனின் உறவினர் ஒருவர் புதுக்கடையில் அடகு கடை நடத்தி வருகிறார். புதுக்கடையில் போலி நகைகள் வைத்து மோசடி நடந்தது குறித்தும், மோசடி செய்த பெண் குறித்தும் வாட்ஸ் அப்பில் தெரிவித்து உள்ளார். வாட்ஸ் அப்பில் வந்த படத்தில் இருந்த பெண்தான் தன்னிடம் நகை அடகு வைத்தவர் என தெரிந்து கொண்ட ஜெனின் இரணியலில் விசாரித்தார். அப்போது தான் அந்த பெண் கொடுத்த முகவரி போலி என தெரியவந்தது. சந்தேகமடைந்த அவர் நகைகளை வெட்டிப் பார்த்துள்ளார்.‌ அதன் பின்னரே அனுஷாவின் மோசடி ஜெனினுக்கு தெரிய வந்துள்ளது. ஆதார் அட்ைட போன்ற ஒரிஜினல் முகவரி சான்று வாங்கி நகைகளை அடகு பிடித்தால் மோசடிகளை தவிர்க்க முடியும் என போலீசார் கூறி உள்ளனர்.

Tags : Rs 1.43 lakh fraud in Monday; Accumulating complaints against teenage girl in Kumari: Sensational reports on fake jewelery
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...