குமரியில் கஞ்சாவுடன் கைதான 5 பேரின் இன்ஸ்டாகிராம் செல்போன் அழைப்புகள் ஆய்வு: வி.ஐ.பி.க்களின் வாரிசுகளுக்கும் தொடர்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கஞ்சாவுடன் பிடிபட்ட 5 பேருடன், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தள கணக்கில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். எஸ்.பி. தனிப்படை போலீசார் மற்றும் டிஐஜி மற்றும் ஐ.ஜி. தனிப்படையினரும் சோதனை மேற்கொண்டு கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்து வருகிறார்கள். இந்த வருடத்தில் இதுவரை 232 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம், ராஜாக்கமங்கலம் - கோணம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக பைக்குகளில் வந்த ஆசாரிப்பள்ளம் அனந்தன்நகர் பகுதியை சேர்ந்த வில்சன் மகன் ஜெரீஸ் (24), கோணம் எறும்புக்காடு பகுதியை சேர்ந்த ஜெகதீசன் மகன் வினோத் (28), மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் டேவிட் மகன் பிரிஜின் பிரகாஷ் (22) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. எடை இயந்திரம், 3 செல்போன்களும் கைப்பற்றிய போலீசார், அவர்கள் வந்த பைக்குகளையும் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஐதராபாத்தில் இருந்து கூரியர் சர்வீஸ் மூலம், கஞ்சா பார்சல் வந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நாகர்கோவில் இந்து கல்லூரி ரோட்டில் உள்ள  கூரியர் அலுவலகத்திலும் விசாரணை மேற்ெகாண்டனர்.

இதே போல் நேசமணிநகர் போலீசார் நடத்திய சோதனையில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த வீரமணி (20), ராமன்புதூர் நாஞ்சில்நகரை சேர்ந்த திபு (19) ஆகியோரிடம் இருந்தும் சுமார் 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கும் கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா பார்சல் வந்தது தெரிய வந்தது. ராஜாக்கமங்கலம், நேசமணிநகர் பகுதியில் கைதான 5 பேருமே இளைஞர்கள் ஆவர். இவர்களில் 2 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் ஆவர். ரூ.20 ஆயிரத்துக்கு 1 கிலோ கஞ்சா வாங்கி வந்தால், அவற்றை ரூ.40 ஆயிரம் வரை விற்பனை செய்திருக்கிறார்கள்.

செல்போன்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுக்குள் ரகசிய குறியீடு வைத்துக்கொண்டு தகவல்களை பரிமாற்றம் செய்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இவர்களின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் கணக்கில் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் செல்போன்களில் இவர்களை தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல விஐபிக்களின் வாரிசுகளும் இடம் பெற்றுள்ளனர்.

அவர்களுக்கும் கஞ்சா சப்ளை செய்திருக்கலாமா? என்ற சந்தேகம் வந்துள்ளது. இதன் பேரில் தனிப்படை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சாவுடன் பட்டதாரி இளைஞர்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: