×

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவள்ளூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உயர்ந்து வருவதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்தனர். பூண்டி நீர்த்தேக்கம்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இன்றைய நிலவரப்படி 947 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து 550 கன அடி நீரும் மழையின் காரணமாக 280 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 621 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரி: மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இருப்பு 3048 மில்லியன் கனஅடி. நீர்வரத்து 270 கன அடி‌. சென்னை மக்களுக்காக 703 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரி: மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 132 மில்லியன் கன அடி. நீர்வரத்து 26 கன‌அடியாக வந்து கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரி: மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 3475 மில்லியன் கனஅடி. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 1,700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கண்ணன் கோட்டை: கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 430 மில்லியன் கனஅடி. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மழையால் விவசாயம் தங்குதடையின்றி நடைபெற இந்த மழை மேலும் கைகொடுக்கும். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் மழை அளவு: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. கும்மிடிப்பூண்டியில் 53 மிமீ மழையும், பள்ளிப்பட்டில் 9 மிமீ மழையும், ஆர்.கே.பேட்டையில் 49 மிமீ மழையும், சோழவரத்தில் 47 மிமீ மழையும், பொன்னேரியில் 51 மிமீ மழையும், செங்குன்றத்தில் 37 மிமீ மழையும் பெய்துள்ளது. மேலும் ஜமீன் கொரட்டூரில் 110 மிமீ மழையும், பூந்தமல்லியில் 92 மிமீ மழையும், திருத்தணியில் 62 மிமீ மழையும், திருவாலங்காட்டில் 76 மிமீ மழையும், பூண்டியில் 46 மிமீ மழையும், தாமரைபாக்கத்தில் 14 மிமீ மழையும் திருவள்ளூரில் 55 மிமீ மழையும், ஊத்துக்கோட்டையில் 80 மிமீ மழையும், ஆவடியில் 59 மிமீ மழையும் என மொத்தம் 840 மிமீ மழை பெய்துள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 56 மிமீ மழை பெய்துள்ளது.

Tags : Tiruvallur district ,Boondi ,Puhal ,Cholavaram ,Sembarambakkam ,Kannankottai , Widespread rain in Tiruvallur district; Boondi, Puhal, Cholavaram, Sembarambakkam Kannankottai lakes increase water level: Farmers happy
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...