×

உத்திரமேரூர் அருகே திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி கோலாகலம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் உடனுறை தர்மராஜன் கோயிலில் ஆண்டுதோறும் மஹோத்சவ மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பெருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் கோயில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகள நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

இதற்காக பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட துரியோதனன் சிலையினை கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்கள காட்சியினை தத்ரூபமாக நடத்தப்பட்டது. இதில் பீமன் வேடமணிந்தவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்து துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. மாலையில் தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், கோயில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்க தீமிதித்தனர். இரவு திரௌபதி அம்மன் பஞ்சபாண்டவர்களுடன் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பெருநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Duryodhana ,Draupadi Amman temple ,Uttiramerur , Duryodhana battlefield riot at Draupadi Amman temple near Uttiramerur
× RELATED போளூர் அருகே துரிஞ்சிகுப்பத்தில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா