திருமணமான 7 நாளில் மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் ஊராட்சி சி.கே.ஆசிரமம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் கார்த்திக்(25). இவர் ஒசூரில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கும் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 13ம்தேதி திருமணம் நடந்தது. புதுமண தம்பதி மறுவீடு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு உறவினர் வீடுகளுக்கு சென்று வந்தனர்.

நேற்று கார்த்திக் தனது மாமியார் வீட்டில் விருந்து முடிந்து சி.கே.ஆசிரமம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியுடன் வந்தார். இன்று காலை அவர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே உள்ள மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதனை அணைப்பதற்காக மின்சார சுவிட்ச்சில் கை வைத்துள்ளார். அப்போது மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக்கை குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அவரது மனைவி மற்றும் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: