கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் மெழுகு சிலையை பார்த்து நெகிழ்ந்த மணப்பெண்: மணமேடையில் அண்ணன் வழங்கிய பரிசு

திருமலை: கொரோனாவால் இறந்த தனது தந்தையின் மெழுகு சிலையை, மணமேடையில் இருந்த தங்கைக்கு திருமண பரிசாக அவரது அண்ணன் வழங்கினார். இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்-ஜெய தம்பதியினர். இருவரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பனிகுமார் என்ற மகனும், சாய் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் வேலை செய்து வந்தனர். கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில் சாய்க்கும் மதன் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. தனது தந்தை மீது அதிக பாசம் வைத்திருக்கும் தங்கைக்கு திருமண பரிசாக தந்தை சுப்பிரமணியன் மெழுகு சிலை வழங்க பனிகுமார் முடிவு செய்தார். அதன்படி அமெரிக்காவில் உள்ள தனது நண்பர்கள் மூலம் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து கர்நாடகாவில் உள்ள சிற்பி மூலம் தயார் செய்தார். இதை திருமணம் முடிந்ததும் மணமேடையில் இருந்த சாயிடம் வழங்கினார். தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட மெழுகு சிலை, உண்மையாகவே சுப்பிரமணியன் போல் இருந்ததை பார்த்த மணப்பெண் சாயி, அவரது தாய் ஜெய மட்டுமின்றி திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஆனந்த கண்ணீர் விட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: