×

தேனியில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.20 கோடிக்‍கு மேல் மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் அதிக சதவீதம் வட்டி தருவதாக கூறி 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த நிதி நிறுவன அதிபரை, தேனி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் கோவையை தலைமையிடமாக கொண்டு, கடந்த 2019ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிதி நிறுவனத்திற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, நாகர்கோயில், பெங்களூரு ஆகிய ஊர்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதந்தோறும் 10%வட்டி தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதை நம்பி தேனி மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். நிதி நிறுவனம் தொடங்கிய முதல் 3 மாதம் வட்டி தொகையை முறையாக வழங்கி உள்ளனர். பின்னர் கொரோனா முடக்கம் என்ற காரணம் கூறி, வட்டி வழங்கியதை நிறுத்தியதுடன் நிதி நிறுவன அதிபர் முத்துசாமி தலைமறைவானார். கம்பத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி கொடுத்த மோசடி புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த தேனி குற்றப்பிரிவு போலீசார் பொதுமக்களிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் முத்துசாமியை கைது செய்தனர். தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முத்துசாமி 15 நாள் நீதிமன்ற காவலில் தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.      


Tags : Theni , Theni, high interest, fraud, financial institution president, arrested
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...